வியாழன், 15 மே, 2014

நம்பினோர்க்கு வரதராசன்! - குமுதம் முன்னாள் ஊழியர் திரு.கருணாகரனின் மீள்.

நம்பினோர்க்கு வரதராசன்!

சென்னையில் பலத்த மழை. தெருக்களில் மழை வெள்ளம். அந்தப் புகைப்படக்காரர் தான் பணியாற்றும் அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்து கொண்டிருந்தார். வழியில் சாலையில் ஓரிடத்தில் மேன் ஹோல் திறந்திருக்க, அது தெரியாத வகையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. போட்டோ கிராபர் தனது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த மேன் ஹோலில் ஒரு நீண்ட கழியை அடையாளத்துக்கு சொருகி வைத்துவிட்டு, மீண்டும் அலுவலகம் விரைகிறார். இதனை அந்த வழியாக வந்த அவரது முதலாளி பார்க்கிறார். அலுவலகம் வந்தவுடனே அந்தப் புகைப்படக்காரரை நேரில் அழைத்து அவரது சமூக அக்கறையைப் பாராட்டிய அவர், அந்தப் புகைப்படக்காரருக்கு ஆயிரம் ரூபாய் இன்க்கிரீமெண்ட் தருகிறார். அந்த முதலாளி குமுதம் சேர்மன் வரதராசன்.

அவரைப் பற்றி நினைக்கும்போது, நினைவுக்கு வரும் திருக்குறள்,
‘சொலல்வல்லன், சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது’. நான் அதிக ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனம் குமுதம். சுமார் பத்து ஆண்டுகள். என் பன்முகத் திறமை முழுதும் வெளிப்பட்டதும் அங்குதான்.

ஒரு நிர்வாகி, ஓர் ஆசிரியர், ஒரு மனிதவள மேம்பாட்டாளர், ஒரு மனிதாபிமானி, ஒரு நண்பர், ஒரு உளவியல் அறிஞர், கடுங்கோபக்காரர் என்று பல்வேறு ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

நினைத்ததை முடிப்பவர்

அவரது சாதனையாக மனதில் முதலில் வந்து நிற்பது, குமுதத்தில் ராக்கூத்து எனப்படும் இரவுப் பணியை அவர் ஒழித்ததுதான்.

பத்திரிகைத் துறையில் ராக்கூத்து என்பது ரத்தக்களறி இரவுகள். மிகப் பெரும் சவால். கண்கள் எரிய எரிய புலன்கள் மங்கி பொசுங்கி பேஜ் படித்து, ஒரு வழியாக பக்கங்களை இறுதி செய்வோம். முதல்நாள் காலையில் ஆபீஸ் வரும் இஷ்யூ இன்சார்ஜ், மறுநாள் காலையில்தான் இதழ் முடித்து பிரசுக்கு பக்கங்களை அனுப்பிவிட்டு ஆபீசிலிருந்து தூங்கி வழிந்தபடி வீட்டுக்குச் செல்வார். இரவுப் பணி என்பதால் என்னதான் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் புத்தகத்தில் தவறுகள் தவிர்க்கவே முடியாது. நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்கள் மட்டுமே குமுதத்தில் ராக்கூத்து இருந்தது. அந்தக் கலாசாரத்தை குமுதத்தில் முற்றாக ஒழித்தார் வரதராசன். ஏனென்றால், ராக்கூத்து என்பது இஷ்யூ இன்சார்ஜ்க்கு மட்டுமல்ல, நிறுவனத்துக்கும் பெரிய இடர்ப்பாடு.

‘இஷ்யூ முடிக்க லேட் ஆகறதால் புரொடக்ஷன் லேட் ஆகுது. அதனால் கடைக்குப் புத்தகம் போகறது தாமதமாகுது. தவிர, கரெண்ட் செலவு, பிரஸ் ஊழியர்களுக்கு ஓவர் டைம். என்று நிறுவனத்துக்குச் செலவுகளும் அதிகமாகுது. உங்களை யாரும் ஆறு மணிக்கு மேலே ஆபீஸில் இருக்கணும்னு எதிர்பார்க்கலே. முன் கூட்டியே பிளான் பண்ணி, அஞ்சு மணிக்கே கூட இஷ்யூவை முடிச்சுட்டால் கிளம்பிப் போய்க்கிட்டே இருங்க. எனக்குச் சந்தோஷம்தான். இது நியூஸ் மேகஸின் இல்லே. கடைசிச் செய்திக்காக காத்திருக்கறதுக்கு...’ என்று ஒருநாள் கூறியவர், அவரே, எடிட்டோரியல் மீட்டிங்கிலும் உட்கார்ந்தார்.

எங்கெங்கு தாமதம்? எதனால் தாமதம் என்றெல்லாம் கவனித்தார். கட்டுரைகள் வருவதும் தாமதங்களில் ஒன்று என்பதைக் கண்டுபிடித்தார். ஒவ்வொரு ஐடியாவுக்கும் கெடு வைத்தார். தாமதமாக கட்டுரைகள் வந்தால் அதுகுறிந்து அதிருப்தி தெரிவித்தார். கட்டுரைகள் வந்து சேர்வதை விரைவுபடுத்தினார். கூடுதலாக வடிவமைப்பு ஓவியர்களைப் பணிக்கு அமர்த்தி பணியை முடுக்கி விட்டார். சிறிது சிறிதாக அடுத்த சில வாரங்களிலேயே இரவுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ரசனை மிகுந்தவர்

அச்சுத் துறை, நிர்வாகம் இவற்றில் அவர் திறமை மிக்கவர் என்றால், அவரது எடிட்டோரியல் அறிவு நளினமானது. ரசனை நிறைந்தது. அது அதிகம் வெளியில் தெரியாதது. ஒரு முறை, அதிகமாகக் குடும்பப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகையின் படத்தை அட்டைக்காக தலைப்புகள் வைத்து தயார் செய்து, அவரது அப்ரூவலுக்காக அனுப்பி வைத்தேன். அந்தப் படம் மாடர்ன் உடையில் கொஞ்சம் கவர்ச்சியானது. அவர் அந்த நடிகையின் நிராகரிக்கப்பட்ட மீதமுள்ள போட்டோக்களையும் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வரச் சொன்னார். சென்றேன். ‘இவங்க குடும்பப் படங்களில் நடிச்சுக்கிட்டிருக்காங்க... வாசகர்கள் மனதில் இவங்களுக்கு இருக்கிற இமேஜ் வேறு. இந்தப் படம் கவர்ச்சியா இருக்கு. வாசகர்கள் ஏற்றுக்க மாட்டாங்க...’ என்று கூறியவர், அந்த நடிகை குடும்பப் பாங்காக உடையணிந்திருந்த போட்டோவைத் தேர்வு செய்து கொடுத்தார். அதுதான் அந்த இதழ் அட்டைப் படமாக வந்தது.

என்னதான் சென்டிமெண்ட் கதையாக இருந்தாலும் அது நம்பும்படியாக பிராக்டிகலாக இருக்க வேண்டும். ஜோக்குகள் குபீரென்று சிரிக்க வைக்க வேண்டும. கட்டுரைகளின் மொழிநடை சரளமாக மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் பெண்கள் தவறு செய்வதுபோல் வரும் ஜோக், கதைகளை அவர் அனுமதிக்க மாட்டார். ‘அவர்களும் நம் புத்தகத்தைப் படிக்கிறார்கள். அவங்க மனம் புண்படக் கூடாது...’ என்பார். தொழில் சார்ந்து கிண்டலடிக்கும் க்ளிஷே ஜோக்குகளை நிராகரிப்பார்.

ஒரு கட்டுரையோ, கதையோ வாசகர்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைப் படித்தவுடன் சொல்லி விடுவார். அதில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் கூறுவார். எடிட்டோரியல் மீட்டிங்கில் ஜூனியர்கள் சொல்லும் யோசனைகள் சில நேரங்களில் என்னைப் போன்ற சீனியர்களால் கலாய்க்கப்படும்போது, ‘இல்லை... அதில் ஒரு ஐடியா இருக்கு. டெவலப் செய்யலாம்...’ என்று கூறி, அதற்கு ஒரு கோணம் எடுத்து டெவலப் செய்வார். இறுதியில் அது அந்த வார கவர்ஸ்டோரியாக வெளிவரும். அந்த ஜூனியர் அடையும் சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டுமோ?

உளவியல் அறிந்தவர்

குமுதத்தில் நான் சேர்ந்தபோது, எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட நெருக்கடிகள். தவிர்க்க முடியாத அத்யாவசிய காரணங்களால், கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. சில வட்டியுள்ளவை. சில வட்டியில்லாதவை. கிட்டதட்ட அப்போது நான் வட்டி மட்டுமே மாதம் 2 ஆயிரம் ரூபாய் கட்டி வந்தேன். அந்தக் கடன் கவலைகளால் என்னால் உற்சாகமாக இருக்க முடியவில்லை. நான் பணியில் சேர்ந்து சுமார் மூன்று மாதங்கள் ஓடியிருக்கும். ஒருநாள் சேத்துப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது கார் ஹாரன் ஒன்று பின்பக்கம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. கவனம் சிதைந்து திரும்பிப் பார்த்தேன். என்னை ஒட்டி வந்து நின்றது அந்த கார். சடாரென்று பின்புற சீட்டின் கதவைத் திறந்து. ‘உள்ளே வாய்யா....’ என்று அழைத்தவர் வரதராஜன். முதலில் அதிர்ந்து பின் தயங்கியபடியே அவரது அருகில் ஒண்டிக் கொண்டேன். கார் நகர்ந்தது. அந்த வார குமுதம் இதழ் பற்றி விசாரித்தவர், பிறகு இயல்பாகக் கேட்டார். ‘உங்களுக்கு என்னதான் பிரச்சினை? எப்பப் பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கீங்க? ஏதாவது பிரச்சினை இருந்தா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்... என் ஸ்டாஃப் சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு சந்தோஷம்... பெருமை...’ என்றார்.

என் கடன் பிரச்சினைகளைப் பற்றி பட்டும் படாமல் சொன்னேன். ‘இவ்வளவுதானா பிரச்சினை? அவசரமா எவ்வளவு வேண்டும்?’ என்றார். சொன்னேன். பிறகு அலுவலகம் வந்தோம். மதியம் 12 மணியளவில் காசாளர் கூப்பிட்டார். சென்றேன். ‘எம்.டி. கொடுக்கச் சொன்னாரு... வெளியிலே சொல்லிடாதீங்க...’ என்று அவர் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் நான் கேட்டிருந்த தொகையை விட கூடுதலாகவே பணம் இருந்தது. இதுபோல் வெளியே சொல்லிடாதீங்க என்று கூறி, அவர் ஏகப்பட்ட பேருக்கு உதவி செய்திருப்பதாகப் பின்னாட்களில் நண்பர்களின் வழியே அறிந்து கொண்டேன்.





தொலைநோக்கு உள்ளவர்

அவருக்கு நிறுவனம் குறித்த ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். நிறுவனம் குறித்த தகவல்களை வெளியில் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டார். தீபாவளி பொங்கல் சமயங்களில் மூன்று மாதத்துக்கு முன்பே சிறப்பிதழ்கள் குறித்த திட்டங்கள் தொடங்கி விடும. ஐடியாக்கள் பேசி, அதன் ஸ்டேடஸ் ரிப்போர்ட் தினமும் விசாரித்துக் கொண்டே இருப்பார். இஷ்யூ இன்சார்ஜின் பணி அழுத்தம் இதனால் வெகுவாகக் குறையும்.

குமுதம், கல்கண்டு என்று இரண்டு இதழ்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிறுவனத்தில் இன்று பக்தி, சிநேகிதி, ரிப்போர்ட்டர், ஜோதிடம், ஹெல்த், தீராநதி என்று வகைக்கு ஒன்றாக இதழ்கள் பெருகியிருக்கக் காரணம் அவரது ஆர்வமே. இத்தனை இதழ்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதுகுறித்த எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவே அனைத்துச் செயல்களும் அமைந்தன. குமுதம் இணைய தளத்தில் இந்தப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்தைக் கொண்ட தனித்தனிப் பக்கங்களை உருவாக்க வைத்தார். இணைய தளத்தை வலுப்படுத்தப் போகிறோம் என்று வெளியில் தோற்றத்தை உருவாக்கி ஆட்களைப் பணிக்கு அமர்த்தினார். ஒரே நேரத்தில் நாற்பது ஐம்பது பேர் பணிக்குச் சேர்க்கப்பட்டவுடன் மற்றவர்கள் தங்கள் பணிப் பாதுகாப்பு குறித்துக் கவலைப்படுவதை உணர்ந்த அவர், அவர்களுக்குப் பணி நிரந்தரக் கடிதம் வழங்கினார். இப்படி யாருக்கும் நெருடல் இல்லாமல் ஆட்களை தேர்வு செய்து படிப்படியாக புதிய பத்திரிகைகளை வெற்றிகரமாகக் கொண்டு வந்தார்.

உழைப்பினை மதிப்பவர்

அந்த வாரம் என் இஷ்யூ. அப்போது நான் சினிமாப் பகுதி இன்சார்ஜ். நிறைய கட்டுரைகள் திருத்தி எழுத வேண்டியிருந்த்து. காலை 9.30 மணிக்கு ஆபீஸ். சகாக்கள் எல்லோரும் வந்து விட்டால், திருத்தி எழுதுவது சிரமமாகிவிடும். யாராவது வந்து ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆகவே, மற்றவர்கள் ஆபீஸ் வருவதற்கு முன்பே ஆபீஸ் சென்று வேலையை முடிக்க முடிவெடுத்தேன்.

விடிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்துத் தயாராகி 5 மணி ரயில் பிடித்து ஐந்தரை மணிக்கெல்லாம் என் சீட்டில் உட்கார்ந்து கட்டுரைகளைச் சரிசெய்து கொண்டிருந்தேன். யாருமற்ற தனிமையில் கட்டுரைகள் என்னுடன் உரையாடி தனக்கான வார்த்தைகளைத் தானே தேர்வு செய்து தன்னைத் தானே சரிசெய்து கொண்டிருந்தன.

அப்போது ஆறு மணியிருக்கலாம். நான் நடிகை ரோஜாவுடன் மனம் லயித்து உரையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று என் பின்பக்கம் யாரோ வந்திருப்பதுபோல் சலனம். ஹவுஸ் கீப்பிங் வந்திருப்பார்கள் என்று நினைத்து நான் ரோஜாவின் கட்டுரையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.

‘குட்மார்னிங் கருணாகரன்...’ என்று அதிரும் குரல். ‘அட, இது நம் எம்.டி.யின் குரலாச்சே...’ என்று அடையாளம் கண்டு துள்ளியெழுந்தேன். எதிரே வரதராசன். இரவு முழுதும் பிரஸில் பிரிண்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர், காலையில் பிரீ பிரஸ் வந்திருக்கிறார். நான் வந்திருப்பதாக யாரோ கூற அப்படியே எடிட்டோரியலுக்குள்ளும் வந்திருக்கிறார்.

‘என்ன கருணா இந்த நேரத்தில்?’ என்றார்.

‘நிறைய மேட்டர்களை ரீரைட் செய்ய வேண்டியிருக்கு சார்...’ என்றேன்.

‘வெரிகுட்... கீப் இட் அப்....’ என்று கூறிவிட்டுச் சென்றார். அடுத்த இன்கிரீமெண்ட்டில் எனக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்வு வழங்கப்பட்டிருந்தது. 

மதவுணர்வைக் கடந்தவர்

அவர் வைணவர். பொதுவாக சைவர்களை விட வைணவர்கள் தங்கள் நம்பிக்கைகளில் அதீத பற்றுள்ளவர்கள். அவர்கள் திருமண், எட்டெழுத்து மந்திரம் ஆகியவற்றை உயிராக மதிப்பவர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒருமுறை உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பலத்த அடிவாங்கியது. அந்த வாரத்துக்கான கார்ட்டூன் ஐடியாவாக இந்திய ரசிகர் படம் ஒன்றை வரைந்து, அவரது நெற்றியில் கிரிக்கெட் ஸ்டம்புகள் நாமம் போல் அமைந்திருக்க வேண்டும் என்று ஓவியர் சேகரிடம் ஐடியா கொடுத்தேன். அந்தக் கார்ட்டூனைப் பார்த்த சீனியர் ஒருவர், ‘கார்ட்டூனை டைரக்டர் ஓகே செய்ய மாட்டார். இது வைணவர்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. டைரக்டரிடம் அனுப்பி ஓகே வாங்கி விடுங்கள்...’ என்று அறிவுறுத்தினார். நான் அதனை டைரக்டரிடம் அனுப்பினேன். அவர் அதற்கு ‘வெரி குட்’ என்று குறிப்பெழுதி பெரிய ‘டிக்’ மார்க் போட்டு அனுப்பியிருந்தார். சிறிது நேரத்தில் கீழே எடிட்டோரியலுக்கு வந்த அவர், ‘வாசகருக்கு எது பிடிச்சிருக்கோ அதுதான் நம்ம மதம்...’ என்றார்.

இதேபோன்று இன்னொரு அனுபவமும் உண்டு. குமுதம் பதிப்பாளர் அமரர் பி.வி.பார்த்தசாரதி அவர்களின் 80வது பிறந்த நாளுக்குச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பை என்னிடம் வழங்கியிருந்தார் வரதராசன். அந்த மலரில் பப்ளிஷரைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அந்தக் கவிதையில்,
‘வைணவர்கள் உச்சரிக்கும்
எட்டெழுத்து மந்திரத்தை
பப்ளிஷர்-
உச்சரிக்க மறந்திடினும்-
‘குமுதம்’ எனும்
நான்கெழுத்து மந்திரத்தை
உச்சரிக்க மறந்ததில்லை!
செய்யும் தொழிலே தெய்வமன்றோ!’
என்று எழுதியிருந்தேன். இந்த வரிகளையும் டைரக்டரிடம் காட்டி அனுமதி வாங்கி விடச் சொன்னார்கள். இல்லையென்றால் பிரச்சினையாகி விடும் என்று பயமுறுத்தினார்கள். கவிதையை அவரிடமே எடுத்துச் சென்று காட்டினேன். அவர் அந்த வரிகளைப் படித்து, ‘பிரமாதம். உண்மையைத்தானே எழுதியிருக்கீங்க... பப்ளிஷர் அப்படிதான் வாழ்ந்தார்...’ என்று பாராட்டினார்.

தொழிலின் காதலர்

வேலையில் அர்ப்பணிப்பு, வெற்றியின் மீது வெறி. அவரை உற்சாகக் குறைவாக ஒருநாளும் நான் கண்டதில்லை. எப்போது சந்தித்தாலும் எப்படி போய்க்கிட்டிருக்கு? எனி பிராப்ளம்? என்று ஆபீஸ் நிலவரத்தைக் கேட்டுவிட்டுதான் மற்ற விஷயங்களுக்கு வருவார். அவர் வெளிநாடு சென்றிருந்தாலும் அவர் மனம் குமுதம் ஆபீசையே நினைத்திருக்கும். அங்கிருந்து தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிர்வாகம், எடிட்டோரியல் ஆட்களிடம் பொஸிசன் ஸ்டேடஸ் கேட்டுத் தெரிந்து கொள்வார். எங்கேயாவது தாமதம், தவறு இருப்பதுபோல் அவருக்குத் தோன்றினால், அதனை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்குவார்.

அலுவலகத்தில் ஒரு கறாரான எம்.டி.யாக இருந்தாலும் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்லும்போது, ‘இப்போ நான் உங்க முதலாளி இல்லை. ஃபீல் ஃபிரீ...’ என்று ஜாலியாக அரட்டையடிப்பார். அவரைப் பொறுத்தவரை ‘கன்டென்ட் ஈஸ் தி கிங்...’. வழ வழ தாள், உயர்தரமான அச்சு இவற்றை விட உள்ளடக்கம் ஸ்பைஸியாக இருக்க வேண்டும் என்பார்.

அவரைக் கோபக்காரர் என்று பலரும் கூறுவதுண்டு. நானும் சிலநேரங்களில் அதனை நேரில் கண்டிருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தை நான் கவனித்திருக்கிறேன். அவர் ஒருவர் மீது கோபப்பட்டால் அந்த நபர் மீது மட்டுமே அந்தக் கோபம் இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் எதிர்பாராத விதமாக நாம் நுழைந்துவிடும்போது, ‘வாங்க கருணாகரன்...’ என்று அவர் நம்மை வரவேற்பார். அந்தக் குரலில் சிறிது கூட சில நொடிகளுக்கு முன்பிருந்த கோபத்தின் சாயலே இருக்காது. நான் அவரது கோபத்தை ஒரு நிர்வாக உத்தியாகவே பார்க்கிறேன்.

அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உண்டு. சுருக்கமாய்ச் சொன்னால், அவர் ‘நம்பினோர்க்கு வரதராசன்...’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக