சனி, 29 மார்ச், 2014

பெரு மரமாகிப்போனதொரு வாழ்வு


      ஒரு மகா கலைஞனின் முழுமையான இறப்பு பாலுமகேந்திரா அவர்களுக்கு வாய்த்துள்ளது என்று சொன்னால் அது சாதாரண சொல்லல்ல; காலத்தினூடே இடையீடாக வெட்டி எழுதப்படும் ஒரு அமர சொல். அவரது ஆதர்சமான அழகு அவரது இறப்பிலும் தலைமாட்டில்  நின்றெரியும் காலதீபத்தின் அமர விளக்காக எரிந்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து ஒரு கலைஞனாக கனவுகளை முழுமையாக நிறைவேற்றியவனது பயணம் அவருடையது. அவர் கடைசிவரை அவருடைய வேலைகள் அனைத்தையும் தனி ஒருவராகவே  தனி ஆளுமையாகவே செய்திருக்கிறார்.

     பாலுமகேந்திரா சினிமா பட்டறை,திரைப்படத் தயாரிப்பு, இயக்கம்  இவற்றோடு விழாக்களில் பங்கெடுப்பது வெளிவிவகாரங்கள் இவை எவற்றுக்கும் அவர் யாரையும் அடுத்த நிலையில் பிரதானமாக வைத்துக்கொண்டதில்லை. இதற்கு நம்பிக்கை ஒரு காரணம் அல்ல. மாறாக அவர் தன்  காரியங்களைத் தானே நேரடியாக செய்யவிரும்புவார். தன் தொடர்பான விஷயங்கள் அனைத்திலும் தனக்கு நேரடியான தொடர்பு இருக்க-வேண்டும் என விரும்புபவர். பாலுமகேந்திரா சினிமா பட்டறைக்குக் கூட அவர்  நடிப்பு தவிர்த்து இதர வகுப்புகளுக்கு கூட வேறு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. கிட்டத்தட்ட தனி மனிதனாகவே அவர் தன்னையும் தன் சார்ந்த செயல்பாடுகளையும் நிர்வகித்துக்கொண்டார்.

     74 வயதில் ஒருவர் அப்படி நடந்து கொண்டது அக் காரியங்களுக்குள் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பிடிப்பு இவற்றைத் தாண்டி அக்காரியங்கள் அவர் தனது இறுதிநாளுக்கு முன்பாக தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ற உணர்வோடு செயல்பட்டமைதான் அதற்கு காரணமாக இருந்து வந்திருக்கிறது.

    குரசேவாவின் ‘இகிரு’ படத்தின் நாயகன் போலத்தான் அவருடைய  தீவிரம் இருந்து வந்தது.  அப்படத்தில் நாயகன் வாட்டனபே. வயது முதிர்ந்த  நகராட்சி அதிகாரி. இறப்பு நெருங்கிவிட்டதொரு தருணத்தில்  இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாக்கிவிடும் மனப்பிரயாசையுடன் அவர் உழன்று கொண்டிருப்பார்.   இறுதியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்றை  நிர்மாணித்து விடுவதென முடிவெடுத்து அக்காரியத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வார்.
கிட்டத்தட்ட இறுதி நாட்களில் பாலுமகேந்திராவின் முகமும் இகிருவின் வாட்டனபேவினுடையதைப் போலவே மாறி இருந்தது. சினிமா பட்டறை துவங்கிய பின்பும் கூட அவர் முகம் தீவிரத்தைத் தேடியது. அந்த தீவிரம் என்னவாக இருக்கும்? மனிதர் இந்த வயதில் எதற்காக பிரயாசைப்படுகிறார்? என்ற கேள்விகள் அடிக்கடி எழும். நானும் கூட  இரண்டு மாதங்களுக்கு முன் சிட்டி சென்டரில் நடந்த திரைப்படவிழாவில் வி.ஐ.பி.க்கான லவுஞ்சில்  நிதானமாக அவருடன் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது அவரது இன்னும் நிறைவேற்ற முடியாத கனவாக சிலவற்றை சொன்னார். அதில் ஒன்று நூறு பேரிடம் 50,000_ம் ரூபாய் வாங்கி கூட்டுறவு முறையில் நல்ல படம் எடுப்பது. எந்த சமரசமும் இல்லாத அவரவர் விருப்பத்தோடு கூடிய சுதந்திர சினிமாவாக இருக்கவேண்டும், உன்னைப் போன்றவர்கள் இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். ஆனால் அடுத்த சில நாட்கள் கழித்து அவரது ‘தலைமுறைகள்’  படம் வெளியானபோது அவர் கனவு வெறும் சினிமா  சார்ந்தது மட்டுமல்ல சமூகம் சார்ந்ததும் கூட என்பதை அறிந்து கொண்டேன்.




   ‘இகிரு’வில் நாயகன் வாட்டனபே  இறுதியில் அப்படி ஒரு பூங்காவை உண்டாக்கி  பனிகொட்டும்  நள்ளிரவில் அந்த ஊஞ்சலில் மகிழ்ச்சியுடன் ஆடியபடி திறப்பு விழாவுக்கு முந்தின நாள் நிம்மதியாக  இறந்து போவான்.
பாலுமகேந்திராவின் கடைசி சுவாசமும் கூட அப்படியாகத்தான் பிரிந்தது. கிட்டத்தட்ட வாட்டனபேவினுடையதைப் போல அமைந்தது. அவர் சினிமாபட்டறையில் உடல் கிடத்தப்பட்டிருக்க அங்கு பயிலும் மாணவர்கள் அவரது உடலைச் சுற்றி பாதுகாப்புச் சங்கிலியாக கைகோர்த்து நின்ற காட்சி அவரது லட்சியக் கனவின் உருவகம் போலவே இருந்தது.

   அவரது இறுதி ஊர்வலமும் அவர் மயான மேடையில் சாம்பலாகிய பின்னும் அகலம றுத்த கூட்டமும் அதற்கு சான்று. அனைவருமே அவரோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கப்பட்டிருந்தனர். எது எல்லோருக்குள்ளும் அவரை நோக்கி ஈர்க்க வைத்தது என்று யோசித்த போது தமிழ்த் தலைமுறைக்கு அவர் துவக்கி வைத்த காட்சி வழிப் பாதையும் காட்சியியல் தொடர்பான மெனக்கெடலும் சிந்தனையும் ஆரோக்கியமான கலைச் சூழலுக்கான சமரசமில்லாத மிடுக்கான வாழ்வும் சினிமாக்காரர்களின் சொகுசையும் பவிசையும் பணத்தையும் அனாயாசமாக சுண்டு விரலால் ஒதுக்கிய திமிரும்தான் என்பதை உணர முடிந்தது.

   எழுபதுகளின் இறுதியில் தமிழ்ச் சூழல் கொஞ்சம்  முகத்துக்கு சோப்பு போட்டு கழுவிக்கொண்டு  கண்ணாடி  பார்த்து  தன்னை திருத்திக் கொண்டபோது பாலுமகேந்திரா புதிய சட்டகங்களின் மூலமாக அசையும் பிம்பங்களுக்குள் ஒரு கவித்துவத்தை நிகழ்த்தினார்.  முன்னதாக தேவராஜ், மோகன், பாரதிராஜா போன்றோருடைய படிநிலை-மாற்றங்கள் தமிழரின் ரசனையை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்த உன்னதமான தருணம் அது.

    சினிமா பாணியில் சொன்னால் தமிழ் சினிமாவுக்கு ஒரு சன்ரைஸ் ஷாட் நிகழ்ந்து கொண்டிருந்த நிமிடங்கள். அதுவரை வசனங்களையும் கதாபாத்திரங்களையும்  மட்டுமே நம்பிய தமிழ் சினிமா பின் புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்த நேரம்.
இத்தனைக்கும் நிவாஸ் போன்றவர்கள் ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ போன்ற பாரதிராஜாவின் படங்கள் மூலமாக செறிவான கட்டமைவை காமிரா கோணங்களில் நிகழ்த்திக்-கொண்டிருந்தாலும்.. இயற்கையின் நுண்மையை சூரிய பிரபையில் பிரதிபலிக்கும் மனிதர்களைக் கடந்த இதர உயிரிகளின் அழகை அதன் இயல்போடு மிகைப்படாமல் சட்டகத்தினுள் உயிர்ப்பூட்டிய கலைஞன் பாலுமகேந்திரா ஒருவரே.

    அழியாத கோலங்களின் ‘பூவண்ணம் போல நெஞ்சம்’  பாடலில் ஷோபா, பிரதாப் போத்தன் நடந்து வரும் காட்சிகளில் அவர்களைக் காட்டிலும் உற்சாகமாக காற்றுக்கு தலையாட்டும் ஆற்றோர வளர்ந்த நாணல்களின் நெஞ்சை அள்ளும் அழகு தமிழ் சினிமாவின் கவித்துவங்களுக்கு  துவக்க புள்ளி.. மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்ற ஓடை, வயல்வெளி, மணற்பரப்பு, பாலம், மரங்கள், நாணல், புதர்கள் ஆகியவையும் பாத்திரங்களாக மாறி தமிழின் நிலப்பரப்புக்கான சினிமாவாக அழியாத கோலங்கள் உயிர் பெற்றிருந்தது. ஒளிப்பதிவில் பேக் லைட் எனப்படும்  உத்தியை இதுவரை இவரைப்போல இயற்கை ஒளியில் வெகுசிறப்பாக கையாண்டவர்கள் வேறு எவரும் இல்லை. இவருக்கு அடுத்தபடியாக அதில் கைதேர்ந்தவராக அசோக்குமார் தனிச்சிறப்பு கொண்டவராக இருந்தாலும் முதன்முதலாக பொன்னிற கேசங்களை இயற்கையான பின் ஒளியில் நிகழ்த்திக் காட்டிய சினிமா கவித்துவம் அவருடையது.

   அவருக்குப் பிறகு வந்தவர்களில்  இயற்கை ஒளியை செறிவாக திரை சட்டகத்தில் உள்வாங்கிக் கொண்டவர்களுள் அசோக் குமார் , ராஜீவ் மேனன், மது அம்பாட் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்த உயரங்களைக் கண்டிருப்பினும் அவர் காண்பித்த பச்சை நிறத்தை  வேறு எவரும் காண்பிக்கவில்லை. இதற்காக வண்ணக்கலவை செய்யும் கிரேடிங்கில் அக்காலத்தில் எந்த கம்ப்யூட்டர் உபகரணங்களும் இல்லாமல் கைகளால் ஒவ்வொரு காட்சியாக சரிசெய்து வந்த காலங்களில் ஆங்கிலத்தில் லில்லி எனப்படும் புதிய உத்தியை இதற்காக அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும்  பாத்திரங்களின் உடலில் காணப்படும்  மவுனம் வேறு எவருக்கும் சித்திக்கவில்லை..  அவர் வெறும் ஒளிப்பதிவாளர் என்பதைக் கடந்து இயக்குனராகவும் தொழில் நுட்ப மேதைமையைக் கடந்த ஒரு அகதரிசனம் அவருக்குள் இருந்ததுவும் ஒரு காரணம்.இதே போல சில் ஹவுட் ஷாட்டுக்கு முதன் முதலாக கைதட்டல் வாங்கியதும் அவரது ஒளிப்பதிவு மூலமாகத்தான். இதற்கு முன் கறுப்பு  வெள்ளையில் சில் ஹவுட் ஷாட்டுகள் இடம்பெற்றிருப்பினும்  அவரது படங்கள் மூலம்தான்  அவை அழகியலின் கூறுகளுடன் பாமர ரசிகனும் கைதட்டுமளவிற்கு ரசனையை மேம்படுத்திருக்கிறார்.




    நாயகன் என்றாலே அவன் சிவப்பாக இருக்கவேண்டும் கறுப்பாக இருந்தால் வசீகரமாக அல்லது எல்லோரையும் ஈர்க்கும் தன்மை கொண்டவனாக இருக்க-வேண்டும் என்பதையெல்லாம் பிரதாப் போத்தனின் சோடாபுட்டி கண்ணாடி மூலமாக உடைத்தவர். அழியாத கோலங்களில் கோமாளி போன்ற பிரதாப்பின் தோற்றம் துவக்கத்தில் அனைவருக்கும் புதிராகத்தான் இருந்திருக்கக்கூடும்.. ஆனால் அதே தோற்றம் ‘மூடுபனி’ திரைப்படத்தில் கொலைகாரனாக  மாறிய தருணத்தில் அனைவரும் அதிர்ந்து போனதும் உண்மை.

   உண்மையில் பாலு மகேந்திரா என்ற பெயர் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்ததற்கு மூடுபனிதான் ஒரு முக்கிய காரணம். த்ரில்லர் என்பதைத் தாண்டி தமிழில் அசலான பிலிம் நோயர் வகைப்படமாக அது வெளிப்பட்டிருந்தது.படத்தில் பாத்திரத்தின் பார்வைக் கோணத்தில் கேமரா ஒவ்வொரு அறையாக தேடி பார்க்கும். அந்த குறிப்பிட்ட ஷாட்  தமிழ் சினிமாவின் ரசனையை ஒரு அங்குலத்துக்கு உயர்த்தியது மட்டுமல்லாமல் பாலுமகேந்திரா என்ற நவீன தொழில்நுட்பக் கலைஞனை மக்கள் மத்தியில் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது.

    மேற்சொன்ன படங்களில் பாடல் காட்சிகளின் படமாக்கப்பட்ட விதமும் அவரது தனித்த அடையாளம். அதுவரை இசைக்கேற்ப அதன் தாளத்திற்கேற்ப கேமரா முன் நடிக _ நடிகையர் நடனம் ஆடிக்கொண்டிருந்ததை அபத்தமாக ஒதுக்கித் தள்ளி சாதாரணமாக நடந்து வருவது .. நாயகி நாயகன் சிரிப்பது பாடல் வரிகளைப் பாடாமல் அல்லது வரிகளுக்குத் தொடர்பில்லாமல் காதலின் மகிழ்வூட்டும் தருணத்தில் லயித்துக் கிடப்பது போன்ற காட்சிகளை தொகுத்துக் கொடுப்பது ஆகியவையும் அவரது காட்சியியல் தனித்துவங்கள்.
அதேபோல  அவரது படங்களுக்கென அவரது கதாபாத்திரங்களுக்கென பிரத்யேக உடைகளை அவர் வரித்துக்கொண்டார். தலையை விரித்துப் போட்ட  நிலையில் நாயகியை திரையில் காண்பிப்பது அபசகுனமாகக் கருதப்பட்ட காலத்தில் முதன்முதலாக தலையைப் பின்னாமல் அல்லது ஜோடனை எதுவும் இல்லாமல் ஷோபாவை  ஒரு புடவை ஒரு குங்குமப்பொட்டு ஆகியவற்றின் மூலம் தமிழ் அடையாளம் சார்ந்த அழகியலைக்கண்டு பிடித்தவர்.. மூன்றாம் பிறை திரைப்படத்தில் ‘பொன் மேனி உருகுதே’ பாடல் காட்சியில் இருவருக்குமான உடைத் தேர்வு இன்று வரை அப்பாடலை  தமிழின் சிறந்த சினிமா பதிவாக காப்பாற்றித் தந்துள்ளது என்றால் மிகையில்லை.

   எந்த தருணத்திலும் கதையின் வேகத்தைக் கூட்டுவதற்காக அவர் கதை நிகழும் இடத்தைக் காண்பிக்காமல் விட்டதில்லை. அது ஒரு அலுவலகமாக இருந்தால் அதன் முகப்பு அல்லது பெயர்ப் பலகை காண்பிக்கப்படும். வீடாக இருந்தால் வாசல் கதவு இதெல்லாம் காண்பிக்கப்பட்டபின்தான் வீட்டுக்குள் நுழைவார். படம் பார்ப்பவனுக்குள் கதையின் நிகழ்வு முழுமையாக இருக்க வேண்டுமானால் அவனுக்குள் நிலவியல் ரீதியான புரிதல்கள் அவசியம்  வேண்டும் என்பார். அவர் படைப்பின் ஒழுங்குக்கு இவை மிக முக்கியமாக பங்காற்றி வந்துள்ளன.

   அவரது அனைத்து திரைக்கதைகளின் முடிவும் அவரது இன்னொரு தனித்துவம், அவர் ஒரு போதும் இறுதிக்காட்சியில் கதாபாத்திரங்களைப் பேச விட்ட-தில்லை. இரண்டு முரண்களைக் காண்பித்து பார்வையாளனின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்கு-வதில் மட்டுமே அவர் தீவிர கவனம் செலுத்துவார்.. அழியாத கோலங்களின் இறுதிக்-காட்சி போல நம்மை பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மூன்றாம்பிறை, மறுபடியும், யாத்ரா (மலையாளம்) வீடு, சந்தியாராகம்  என அவரது திரைக்கதைகளின் முடிவு பெரும் காவியத்தன்மைக்குள் செல்வதாகவே இருந்து வந்துள்ளது. காட்சி ரீதியான பெரும் அழகியல் தன்மை கொண்ட யாத்ராவின் இறுதிக்காட்சி  அவரது மேதைமையின் உச்சம் என சொல்லலாம்.

   ‘நீங்கள்கேட்டவை’ அவருக்கான வகைமாதிரியான படம் அல்ல; என்றாலும், அதன் மூலம் பானுசந்தர், அர்ச்சனா என இரண்டு நட்சத்திரங்களின் உதயத்திற்கு அத்திரைப்படம் தன் கடமையை நிறைவேற்றியிருக்கிறது.‘ஓ வசந்த ராஜா...’  பாடல் காட்சி மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கேமரா மூலம் இரண்டாவது முறையாக கட்டியமைத்த ராஜேந்திர சோழன் அவர். கருத்த அழகியை தமிழ் முதன் முதலாகப் பார்த்து ஆச்சர்யப்பட்டது. வெள்ளைத் தோல்தான் அழகு என்ற தமிழரின் பொதுப்புத்தியில் கரடுதட்டிப்போன  ரசனையை தடம் மாற்றி கருத்த பெண்களின் கவர்ச்சியான அழகை மாற்றி நிறுவியவர்.
திரைப்படத்துறையின் இத்தகைய சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணமில்லை. மாறாக அவர் திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரைப் பண்புகள்தான் அவரது நிலைத்த புகழுக்கு காரணம்.

     வணிக சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். புகழின் உச்சத்தில் இருந்த போதும் அவர்  சாதாரண மனிதருக்கான வாழ்க்கையையே வாழ்ந்தார். சாதாரண அம்பாசிடர் கார்மட்டுமே வெகுநாட்களாக வைத்திருந்தார். அதுவும் கூட இல்லாமல் பல சமயங்களில் ஆட்டோவில் செல்பவராக இருந்து வந்தவர். அவரது வளர்ப்பு மகனான இயக்குனர் பாலாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அவர் வாங்கிக் கொடுத்த உயந்த ரக காரை பயன்படுத்தத் துவங்கினார். தாஜ் ஹோட்டலில் நடந்த ‘மறுபடியும்' வெற்றி விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாரதிராஜா, ‘உங்களை போல எந்த சமரசமுத்துக்கும் ஆட்படாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்வது என்னை வெட்கம் கொள்ள வைக்கிறது’ என வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக