சனி, 22 மார்ச், 2014

கால்டுவெல் & தமிழ்மொழியின் அடையாளம்

கால்டுவெல் & தமிழ்மொழியின் அடையாளம் 

கால்டுவெல்லின் (1814 &- 1891) இருநூறாவது ஆண்டுவிழா 2014&ல் நடைபெறுகின்றது. தமிழ்மொழியானது வடமொழியில் இருந்து வேறுபட்ட தனித்துவமான பண்பு உடையது என்பதையும்; இந்தியாவில் மிகப் பழமையான காலத்தில் இருந்தே தனக்கான இலக்கண இலக்கியங்களைக் கொண்டு வளர்ச்சியடைந்து வந்த ஒரு மொழி என்பதையும் உலக அறிஞர்களுக்கு நிரூபித்துக் காட்டியவர் கால்டுவெல். தமிழராக இருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நினைவை நெஞ்சில் நிறுத்துவது நன்றியின் அடையாளமாக இருக்கும். ஏனென்றால் அவர் தமிழ்நாட்டில் (1838) காலடி எடுத்து வைத்த நாட்களில் தமிழர்களே தமிழ்மொழியின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தனர். இன்று நாம் நம்முடைய மொழியை எந்த வகையாக நாளுக்குநாள் கொன்று வருகிறோமோ அதேநிலை அன்று நிலவியது.

19&ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகமும் (இந்தியா) இலங்கையும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு-விட்டன. அந்தக் கம்பெனியின் நிருவாகத்திற்கான ஊழியர்கள்  அதிகாரம் உடையவர்களாகவும், செல்வவளம்- மிக்கவர்களாகவும், மரியாதைக்குரியவர்-களாகவும் உள்நாட்டு மக்களால் கருதப்-பட்டனர். இதனால் கம்பெனியின் பதவிகளைப் பெறுவதே தமிழர்கள் பலரின் வாழ்க்கையின் குறிக்கோளாக மாறிவிட்டது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு அவர்கள் ஆங்கிலம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.



அந்தக் காலத்தில் தமிழ்-நாட்டிலும் இலங்கையிலும் பாரம்பரியமாக கல்வியறிவு பெற்ற வாய்ப்புடையவர்களாக நான்கு ஐந்து சாதியினரே இருந்தனர். பெரும்பாலான தமிழ்மக்கள் கைநாட்டுப் பேர்வழிகளாகத்தான் வாழ்ந்து வந்தனர். அதுகாலம் வரையில் தமிழ்மொழியில் கல்வி கற்று வந்த அந்தச் சாதியினர் காலத்துக்-கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்காக தங்களுடைய தாய்மொழியையே புறக்கணித்து விட்டனர். இதனால் அத்தகைய சாதிக்-காரர்களால் அதுகாலம்வரை பயிலப்பட்டு வந்த தமிழ்மொழி கல்விப்புலத்தில் இருந்து புறக்கணிக்கப்-பட்டது. எனவே பல்லாயிரம் தமிழ்நூல் சுவடிகள் பேணிக்காப்போர் இல்லாமலும் படி எடுப்போர் இல்லாமலும் அழிவுநிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் விளைவாக அந்தக் காலத்துக்கு முன்பு புகழ்பெற்று இருந்த தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற பல நூல்களை அடுத்த தலைமுறையினர் மறந்துவிட்டனர்.
 
1820 தொடங்கி இலங்கையில் அமெரிக்க மிஷனரிமாரும் தமிழ்நாட்டில் ஐரோப்பிய பாதிரியார்களும் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்காக மக்கள் மத்தியில் பல்வேறு பணிகளைச் செய்தனர். கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளைக் செய்வதற்காக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை நிறுவினர். அப்படி அவர்களால் (ஆண்டர்சன்) 1837&ல் நிறுவப்பட்டது-தான் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி. 1842&ல் மதுரை அமெரிக்கன் கல்லூரி தொடங்கப்-பட்டது. இந்தக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வடக்குப் பகுதியில் அமெரிக்க மிஷனரிகளால் பல கல்வி நிலையங்கள் தொடங்கப்-பட்டன. இந்தக் கல்வி நிலையங்கள் ஆங்கிலத்தின் வழியாகக் கல்வி கற்பித்தன. தமிழ்மக்கள் இத்தகைய கல்வி நிறுவனங்களால் சிறப்பான கல்வியைப் பெறும் வாய்ப்பைப் பெற்ற அதே நேரத்தில் தங்களுடைய பாரம்பரியமான கல்வியையும் பண்பாட்டையும் இழக்கத் தொடங்கினர். 


இப்படி ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்ட நம்முடைய மொழியை அயல்-நாட்டவர்களாகிய கிறிஸ்துவப் பாதிரியார்களும் ஒரு சில அரசாங்க அதிகாரிகளான ஆங்கிலேயர்களும்தான் மீண்டும் உயிர்ப்பித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வரலாறும் இன்றைய தமிழ்மக்களால் மறக்கப்பட்டுவிட்டது. டாக்டர் டானியல் புவர், லீவை ஸ்போல்டிங், மைரன் வின்சிலோ, டாக்டர் எச்.ஆர்.ஹொய்சிங்டன், சாமுவேல் பிஸ்க் கிறீன் போன்றவர்கள் இலங்கையிலும் எல்லிஸ், ராட்லர், ட்ரு(பீக்ஷீமீஷ்), சார்லஸ் கிரால், டாக்டர் கால்டுவெல், ஜான்முர்டாக், எச்.பவர் போன்றவர்கள் இந்தியாவிலும் செய்த பணிகளால் அழிவுநிலையில் இருந்த தமிழ்மொழி காப்பாற்றப்-பட்டது. கூடுதலாக அன்றைய கல்வி-நிலையங்களின் பாடத்-திட்டங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் கி.பி.1868&ல் பவர் பாதிரியாரால் அச்சிடப்பட்ட சீவக சிந்தாமணியின்நாமகள் இலம்பகம்Õ என்ற நூல்  அன்றைய பி.. பாடத்தில் சேர்க்கப்பட்டது. அந்தப் பகுதியை பாடமாகப் படித்த சேலம் இராமசாமி முதலியார் (நீதிபதியாக இருந்தவர்) முழுநூலையும் அச்சில் காணவேண்டும் என்ற ஆவல் உடையவராக இருந்தார். தன்னுடைய ஆவலை பிற்-காலங்களில்  .வே.சாமிநாத அய்யரிடம் கூறி, அவருக்கு ஒரு முழுமையான சிந்தாமணிச் சுவடியையும் கொடுத்தார். சீவகசிந்தாமணி சாமிநாத அய்யரால் முதன்முதலில் முழுமையாக நச்சினார்கினியர் உரையுடன் வெளியிடப்பட்டது (1887). இந்த நிகழ்ச்சிதான் தமிழ்-மக்களுக்கு பழந்தமிழ் நூல்களை மீட்டுக்கொடுத்தது. சாமிநாத அய்யரை தமிழ்த்தாத்தாவாக மாற்றி அமைத்தது. பவர் பாதிரியார் இல்லையென்றால் .வே.சா. என்ற ஒருவர் தமிழுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்.
 
இதேபோன்று திருக்-குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்த ட்ரு, கிரால் போன்றவர்களால் மேல்நாட்டு-க்காரர்களுக்கும், ரோமில் இருந்த போப்-பாண்டவருக்கும் மற்றும் பலநாட்டுப் பாதிரியார்களுக்கும் பைபிளைப் போன்ற சிறப்புடைய நூல் திருக்குறள் என்ற கருத்து உருவானது. இந்தக் கருத்தானது இந்தியாவில் வழங்குகின்ற தமிழ்மொழியானது கிரேக்கம் எபிரேயம் போன்ற மொழிகளுடன் சேர்த்து வைத்து பேசத் தகுதியான மொழியாகும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு உருவாக்கியது.


 
இப்படியான ஒரு நிலையை தமிழ்மொழி அடைந்து விட்டாலும் இந்திய மொழிகளுக்-கெல்லாம் தாயாகிய மொழி சமஸ்கிருதம்தான் என்ற கருத்து பல ஐரோப்பிய அறிஞர்களிடம் மேலோங்கி இருந்தது. தமிழர்களிலும் பலர் அக்கருத்தை ஏற்றுக்கொண்டு இருந்தனர். இத்தகைய கண்ணோட்டம் சரியானதல்ல என்றும் உண்மைநிலை இதற்கு மாறானது என்பதையும் கால்டுவெல் தன்னுடைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார். அந்தக் கண்டுபிடிப்பைதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலாக 1856&ல் வெளியிட்டார். தமிழ்மொழி மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளும் வட இந்தியாவின் சில பகுதிகளில் பேசப்பட்ட துதம், கோதம், கோண்டு போன்ற மொழிகளும் திராவிடமொழிகளின் குடும்பத்தைச் சார்ந்தவை என்று நிறுவினார். அந்த நூலில் திராவிடமொழிகள் தங்களுக்கே உரிய தனித்-தன்மைகளைக் கொண்டு செயல்படும் விதத்தை எடுத்துக்காட்டுகளால் விளக்கி நிலைநாட்டினார். அதிலும் தமிழ்மொழி சமஸ்-கிருதமொழிக்கு இணையாக இலக்கண இலக்கியங்களைக் கொண்டு நீண்ட காலமாகவே செயல்பட்டு வந்ததை மேல்-நாட்டு வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டு விளக்குகின்றார். 

கால்டுவெல்லின் ஒப்-பிலக்கண நூல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதனால் அந்நூலின் கருத்துக்கள் வெகு-விரைவாக ஐரோப்பிய மொழிநூல் அறிஞர்களிடையே பரவியது. அதன் விளைவாக தமிழ்மொழியின் வர-லாற்றுப் பழமையையும் மொழிக்கட்டமைப்பையும் இலக்கண இலக்கிய வளத்தையும் மேனாட்டவர்கள் தெரிந்துகொண்டனர். 
சுமார் 1000 ஆண்டுகள் சாதிகளாகப் பிளவுண்டு கிடந்த தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று அடை-யாளப்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய நிலை சுமார் 100 ஆண்டுகள் நிலவியது. இன்று அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் எந்த வகையிலும் ஒருங்கிணைக்க முடியாத தமிழ்ச் சாதிகளை திராவிடம் என்ற கருத்-தோட்டத்தால் ஒருங்கிணைத்த கால்டுவெல்லின் பணி மகத்தானதுதான்
 
இந்த நூலை 19 ஆண்டுகளுக்குப் பின் (1875) இரண்டாம் பதிப்பாக கால்டுவெல் வெளியிட்டார். முதற்பதிப்பிற்குப் பிறகு தான் செய்த ஆய்வுகளை 300 பக்கங்கள் இணைத்து இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இந்த இரண்டாம் பதிப்பில் தமிழ்மொழியின் பழமை என்ற கட்டுரை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதுஅந்தக் கட்டுரையில் தமிழ்மொழியின் இலக்கிய வரலாற்றை கால்டுவெல் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றை இணைத்து தமிழ் இலக்கிய வரலாற்றை முதல்முதலாக எழுதி பின்வந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் கால்டுவெல்தான் என்றால் அது மிகையாகாது. 
இந்நூலை 1913&ல் சென்னைப் பல்கலைக் கழகம் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டது. இதில் 1875&ல் இரண்டாம் பதிப்பில் இருந்து சுமார் 250 பக்கங்கள் வரை நீக்கப்பட்டுவிட்டன. அதில் அவர் பறையர்கள்தான் பழந்தமிழர்கள் என்று எழுதியிருந்த முக்கியமான ஆய்வுக் கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 கருத்து:

  1. கால்டுவெல் அவர்களுக்கு தலைவணங்குகிறேன். அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கின்ற விடயம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு